Friday, 16 March 2018

தனியார் செல்லிடப்பேசி தொடர்பலை துண்டிப்பு: பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் தகவல் பரிமாற்றம் முடக்கம்

தமிழகத்தில் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் பயன்படுத்தப்படும் தனியார் செல்லிடப்பேசி நிறுவனத்தின் சி.யூ.ஜி. (c‌l‌o‌s‌e‌d ‌u‌s‌e‌r ‌g‌r‌o‌u‌p) திட்டம், கடந்த 10 நாள்களுக்கும் மேலாக துண்டிக்கப்பட்டுள்ளதால், அலுவலர்களிடையே தகவல் பரிமாற்றம் முடங்கியுள்ளது.
இயக்குநர் முதல் ஒன்றியத் துறை அலுவலர்கள் வரை பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு, கடந்த 2008-ஆம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தனியார் செல்லிடப்பேசி நிறுவனத்தின் சி.யூ.ஜி. திட்டத்தினாலான செல்லிடப்பேசி இணைப்புக்கான சிம் கார்டுகள் வழங்கப்பட்டன.

       மாநில மற்றும் மாவட்ட அளவில் அனைத்து நிலைகளில் உள்ள அலுவலர்களுக்கும் ஒரே மாதிரியான எண் வரிசை வழங்கப்பட்டுள்ள செல்லிடப்பேசி இணைப்பு மூலம், பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்ககத்தில் அனைத்து நிலைகளிலும் அலுவலர்களிடையே செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டும், குறுந் தகவல் மூலமும் கேட்பாணைகள் பெறுவது, உத்தரவுகள் பிறப்பிப்பது, ஆலோசனை வழங்குவது, புள்ளி விவரம் மற்றும் விளக்கம் கேட்டு பெறுவது உள்ளிட்ட பல்வேறு தகவல் பரிமாற்றங்கள் நடைபெற்று வந்தன.அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் 413 வட்டாரங்கள், 30 தணிக்கை அலுவலர்கள், 30 புள்ளியியல் பிரிவு அலுவலர்கள், அனைத்து மாவட்டங்களின் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், அனைவருக்கும் கல்வி இயக்க உதவித் திட்ட அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள்,  862 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் உள்பட பல்வேறு அலுவலர்கள் இந்த செல்லிடப்பேசி இணைப்பில் உள்ளனர்.
   
இந்த நிலையில், கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சி.யூ.ஜி. திட்டத்திலான இந்த செல்லிடப்பேசி தொடர்பலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், தொடக்கக் கல்வித் துறையில் செல்லிடப்பேசி மூலம் நடைபெற்று வந்த அனைத்து தகவல் பரிமாற்றங்களும் முடங்கியுள்ளன. இதற்கு மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்யாததால், அலுவலக தொலைபேசி, அலுவலர்களின் சொந்த செல்லிடப்பேசி எண் ஆகியவற்றின் மூலமும், மின்னஞ்சல் மூலமும் தகவல் பரிமாற்றம் நடைபெற்று வருகிறது. இதனால்,  தொடக்கக் கல்வித் துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அனைவருக்கும் இடை நிலைக் கல்வி இயக்கம் ஆகியவற்றின் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக, கல்வித் துறை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. இது குறித்து மாவட்ட கல்வித் துறை வட்டாரங்கள் கூறுகையில், இப் பிரச்னை பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here